Saturday 27 February 2010

கொஞ்சம் தேநீர்- நெஞ்சினில்!!

மஞ்சளும் சிகப்புமாய்ப்

பூத்து நிற்கும்

பூவரச மரம்,

 

ஆணியடித்து சுவரில்

வரிசையாய் மாட்டப்பட்ட

அரிவாள்கள்,

 

கள்ளிவேலி கட்டிய

தோட்டத்தின் மூலையில்

கயிறில்லாத

ராட்டினத்துடன் கேணி,

 

பாதி பறித்த

இலைகளுடன்

துளிர்த்து நிற்கும்

தண்டங்கீரையின்

அடித்தண்டுகள்!

 

எங்கேனும் இவற்றைக்

காணும் போதெல்லாம்

வந்து போகும்

அப்பச்சியின் முகம்!!!

Thursday 25 February 2010

அனல்ஜெசிக் நெஃப்ரோபதி(வலிநீக்கி சிறுநீரகவாதம்!!)

ஆறு மாதங்களுக்கு முன் என்னிடம் ஒரு பெண் நோயாளியை அழைத்து வந்திருந்தனர். அழைத்து வந்தவர்கள் என் நீண்ட நாள் நண்பர்கள். ஆனால் அந்தப்பெண்ணுக்கு 35 வயதிருக்கும். முகமெல்லாம் வீங்கி உடல் மெலிந்து, கண்களில் மரண பயத்துடன் இருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்தே அவரை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவரும் அவருடைய அக்காவும் தையல் கடை வைத்திருந்தனர்.கடினமாக் உழைக்கும்  இருவரும் அடிக்கடி பக்கத்தில் உள்ள மருந்துக்கடையில் கை கால் வலிக்கு மாத்திரை வாங்கிச்சாப்பிடுவார்கள். 10-15 வருடமாக இது நடந்துவந்தது.

இந்த வயதில் அந்தப் பெண்ணிற்கு என்ன வியாதி? அதுதான் வலிநீக்கியால் உண்டாகும் சிறுநீரக செயலிழப்பு.( அனல்ஜெசிச் நெஃப்ரோபதி)

அன்பு நண்பர்களே! அனல்ஜெசிச் என்றால் வலிநீக்கி மருந்துகளைக் குறிக்கும். நெஃப்ரோ- என்றால் ”சிறுநீரகம் சார்ந்த” என்று கொள்ளலாம்.

1.எந்த மருந்துகளால் பொதுவாக வருகிறது?

  • ஆஸ்பிரின்- aspirin
  • பாரசிடமால்-acetaminophen
  • புருஃபன்-ibuprofen
  • டைக்ளோஃபெனாக்-Diclofenac sodium
  • இது போன்ற பல வலிநீக்கிகளை உண்ணும்போது.

2.ஆண்,பெண் இருபாலரில் யாருக்கு அதிகமாக வருகிறது?

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு.

3.இந்த நோயின் அற்குறிகள் என்ன?

  • உடல் சோர்வு
  • சிறுநீரில் இரத்தம்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீரின் அளவு குறைதல்
  • முகம், உடல் வீக்கம்
  • முதுகு இடுப்பின் பக்கவாட்டில் வலி
  • சிலருக்கு மேலே சொன்னவை இல்லாமலும் இருக்கலாம்.

4.என்ன பரிசோதனைகள் செய்யலாம்?

  • இரத்த யூரியாநைட்ரஜன் Blood Urea Nitrogen- 7-18மிகி/டெ.லிட்டர்
  • கிரியேட்டினின் - Serum creatinine- 0.7-1.5மிகி%
  • மேலும் பொதுவான இரத்தப்பரிசோதனைகள்.

5.இது வராமல் தடுப்பது எப்படி?

வலி நிவாரணிகளை அடிக்கடி  உண்பதை நிறுத்த வேண்டும்.

வலி நீக்கிகள் இந்தியாவில் மருந்துக்கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. மருத்துவர்கள் தரும் மாத்திரைகளைவிட வீரியமான மருந்துகளை கடைகளில் தருகின்றனர். இதற்கு ஏழை மக்களில் பலர் அடிமையாகவே  இருக்கிறார்கள்.

இது பற்றிய விழிப்புணர்வு மேலைநாடுகளில் ஏற்பட்டுள்ளதல் இதனால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகள் அங்கு குறைய ஆரம்பித்துள்ளன.

நம் நாட்டில் வலிநிவாரணியால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு மிக அதிகமாக உள்ளது. நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.

Tuesday 23 February 2010

கொஞ்சம் தேநீர்- பொய்மையும்!

யாருமறியா ஆழங்களில்

வித விதமாய்ப் பொய்கள்,

 

சிறு பிரம்மனாய்,

அவற்றை ஒன்றிணைத்து

ஒப்பனைகளுடன் சுட்டெடுக்கிறேன்

அன்றன்றைய

என்னை!!!

 

உண்மையின்

கசப்பினை விட

அவை இனிமையானவை,

 

வக்கிரம் மறைத்து

உலாவரும் என்

பிம்பங்களுடனேயே

நீங்கள் கலந்து மகிழ்ந்தீர்கள்!

 

அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட

பிரதிகள்

அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென

எவருக்கும் போதுமானதாய்

இருந்தன,

 

அனைவருக்கும் பிடித்திருக்கிறது,

பொய்களால் ஆன

என்னை!!!

Monday 22 February 2010

கொக்கைன்,கிராக் கொக்கைன்!!

கொக்கைன் ஒரு போதைப் பொருள் என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும்.  இது கொக்கா என்ற ஒருவகைச் செடியின் இலையிலிருந்து கிடைக்கும் போதைப் பொருள்.

ஆதிகாலத்திலேயே  இதனை தென் அமெரிக்கப் பழங்குடியினர் புகையிலையுடன் சேர்த்து உபயோகித்து வந்துள்ளனர்.

கொக்கைன்

1.மூக்கில் பொடி போல் உறிஞ்சுதல்

2.சிகரெட் போல் புகைத்தல்,

3.ஊசி மூலம் செலுத்திக்கொள்ளுதல்

ஆகிய வழிகளில் உபயோகிக்கப்படுகிறது.

Crack Cocaine கிராக் கொக்கைன்: என்பது கொக்கைனுடன் பேக்கிங் சோடா, நீர் கலந்து சிகரெட் போல் புகைக்கத் தயாரிக்கப்படுவது.

கொக்கைன் டானிக்குகளிலும் பல் வலி நிவாரணிகளிலும் முன்பு பயன்படுத்தப்பட்டது.  1885லேயே இது சிகரெட்டாகவும்,பொடியாகவும், நரம்பில் செலுத்தும் ஊசியாகவும் சில மருந்துக் கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோகோ கோலா அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 20 ஆண்டுகளில் அதில் அதிக அளவு கொக்கைன் கலக்கப்பட்டது!!(தற்போது கொக்கைன் கலப்பது இல்லை)

2005ல் அமெரிக்காவில் மட்டும் 70 பில்லியன் டாலர் அளவு  கொக்கைன் விற்கபட்டுள்ளது!!!

கொக்கைனின் தீய பண்புகள்:

1.உபயோகித்த 5 நிமிடத்தில் போதை உண்டாகும். அதிக உணர்ச்சிவசப்படுதல், அதிக பேச்சு, ஆகியவை இருக்கும்.

2.அதன் பின் சோர்வு, இரத்த அழுத்தக்குறைவு, தலைவலி, துரித மூச்சு, படபடப்பு ஆகியவை ஏற்பட்டு வலிப்பு கூட வரலாம்.

3.அதிகம் உபயோகித்தால் ஒரு மணி நேரத்தில் மூச்சு விடுதல் குறைந்து, வலிப்பு ஏற்பட்டு இறப்பும் ஏற்படலாம்.

4.ஊசி வழியாக உபயோகிக்கும் போது இதயம் பாதிக்கப்பட்டு உடனடி மரணம் ஏற்படலாம்.

ஒரு கிராமுக்கு அதிகமான அளவு கொக்கைன் உபயோகித்தால் மரணம் ஏற்படும்!!

கொக்கைனுக்கு அடிமையானவர்களுக்கு:

1.உடல் எடை குறைவு,பசியின்மை,

2.தூக்கமின்மை, கண் குழு விழுதல்,

3.பல்லும் நாக்கும் கருத்துக்காணப்படும்.

4.மன நிலை மாற்றங்கள்

5.தோலுக்கடியில் மணல் இருப்பது போலும், சிறு வாண்டுகள் ஊர்வது போலவும் தோன்றி தோலில் அரிப்பு ஏற்படுதல்

6.நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மனநோயாளியாக மாறிவிடுதல்.

கஞ்சாவுக்கு அடுத்து உலகில் அதிகம் உபயோகிக்கப்படும் போதைப் பொருள் கொக்கைன். அதன் பிடியில் இளைஞர்களைக் காப்பது நம் கடமையாகும்.

Thursday 18 February 2010

சில குறிப்புகள்- மருத்துவம்!

நடைப்பயிற்சி: நடைப்பயிற்சியைப் போல் சிறப்பான உடற்பயிற்சி இல்லை என்று சொல்லுவார்கள். அதுவும் சக்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள், உடல் எடை அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு இது மிகவும் சிறந்தது.

தற்போது நடக்கும்போது இரண்டு கைகளிலும் அரைக்கிலோ அல்லது கால்கிலோ மணல் மூட்டைகளை தூக்கிக்கொண்டு நடந்தால் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மேலும் நீண்டதூரம் நடப்பதைவிட குறைவான தூரத்திலேயே அதிக கலோரி செலவாகி எடை குறைப்பு, சக்கரை குறைப்பு ஆகியவற்றை எளிதில் செயல்படுத்த முடியும்.

ஆயினும் இதய நோயாளிகள்,மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, காலில் புண் பொன்றவை உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பே இதனைச் செய்யலாம்.

இன்றைய இளைஞர்கள் அடிக்கடி வேலை நிமித்தம் வெளியில் சென்று கொண்டிருப்பதால் தினசரி இரண்டு அல்லது சில நேரங்களில் மூன்று வேளையும் வெளியில் சாப்பிடுகிறார்கள். அப்படிச்சாப்பிடுபவர்களுக்கு குடும்பத்தில் சக்கரை நோய் இல்லாவிட்டாலும் சக்கரை நோய் இளமையிலேயே வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெளியில் சாப்பிடும் உணவில்
குறைந்த நார்ச்சத்து, அதிக மாவுச்சத்து, அதிக உப்பு, அதிக மசாலா, அதிக எண்ணைக் கொழுப்பு ஆகியவை உள்ளன.

அதேபோல் சக்கரை நோயாளிகளுக்கு இட்லி,தோசை செய்யும்போது உளுந்து அதிகமாகவும், அரிசி குறைவாகவும் போடவேண்டும்.
ஆனால் உணவகங்களில் அரிசி அதிகம் போடுவார்கள்.
அதேபோல் சாம்பாரில் சக்கரை, பரோட்டாவில் மாட்டுக்கொழுப்பு, சப்பாத்தி மாவில் வாழைப்பழம் போன்றவை சேர்ப்பதாலேயே உடல் எடை அதிகரித்தல், சக்கரை கூடுதல் ஆகியவை ஏற்படுகின்றன!!

Monday 15 February 2010

கொஞ்சம் தேநீர்- வலி!

சுயம் தேடிய பயணத்தில்
தாழ்ந்தும், எழும்பியும்
செல்லும் இடமறியாமல்
மிதந்தது,

வ(ம)னத்தின் சூட்சுமம் அறியாது
தனியாய் அலைந்தது
பிரிந்த சிறகொன்று,

விருட்சங்களின் கிளைகளில்
இடறிக் காயமுற்றன,
தடையற்ற வானில்
பழகிய அதன் மென்கால்கள்!

வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!

Thursday 11 February 2010

வீட்டில் ஜாலி!

விடுமுறை நாள் அது!
இன்னைக்காவது சண்டையில்லாமல் அதிகம் வாய் கொடுக்காமல்(மனைவியிடம்!!)அமைதியாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்!

விடுமுறைன்னா நிறையப் பேருக்கு ஜாலியாக இருக்கும். நமக்கு அப்படி இல்லீங்க! வீட்டில் பெரிய சண்டைகள் வெடிக்கும் நாளே அதுதான் ( அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்!!)

கொஞ்சம் களைப்பாக இருப்பது போல் தோன்றியதால் சரி படுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். தலையணை கொஞ்சம் அழுக்காக இருப்பது போல் தெரிந்தது. “என்ன தலையணையெல்லாம் அழுக்காக இருப்பதுபோல் தெரியுதே” என்றேன்.

ஹாலில் இருந்த என் மனைவி ”இப்பத்தானே துவைக்கப்போட்டேன். அதுக்குள்ளே அழுக்காகிவிட்டதா? போடுகிற சட்டையைத்தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அழுக்காக்கிக் கொண்டு வருகிறீர்கள், அதைத் தொவைக்கவே வேலைக்காரி கோவப்படுறா, இதுல தலைகாணி உறையெல்லம் அடிக்கடி துவைக்கப்போட்டா சொல்லாமலேயே வேலையை விட்டு நின்று விடுவாள்.”
“போடுற சட்டை பேண்டுதான் அழுக்காகுதுன்னா தலையுமா அழுக்கா ஆகும் ? ஒழுங்காகக் குளித்தால்தானே?”
(அய்யா!! அம்மா!! நீங்களே சொல்லுங்க, தலைகாணி அழுக்காயிருக்கேன்னு ஒரு வார்த்தைதான் கேட்டேன், அதுக்கு இவ்வளவு அர்ச்சனையா?” சரி விடுங்க! எனக்கு நாக்குல சனி!!!)
அதுக்கு மேல் பேசினால் ஆபத்து என்று தெரியாதா என்ன? தூங்குவது போல் ஆக்டிங்க் கொடுத்தேன். அப்படியே தூங்கியும் விட்டேன்.

மறுநாள் மதியம் கண்ணயரலாமே என்று படுக்கையில் சாய்ந்தேன். அட! தலையணை உறையைக் காணோம்!!
”ஏம்மா! தலைகாணி உறை ஒன்னு குடு படுக்கணும்” என்றேன்.
தலைகாணி மேல் துண்டை விரிச்சுப்படுங்க- என்று பதில் வந்தது.
”ஒரு உறையாவது குடும்மா!” என்றேன்.

”நீங்கதானே அழுக்கா இருக்குன்னு சொன்னீங்க, அதுதான் எல்லாத் தலைகாணி உறையையும் துவைக்கப் போட்டுவிட்டேன் – சும்மா துண்டை தலைகணி மேலே போட்டுக்கிட்டுத்தூங்குங்க!!தலைகாணி உறை காய்ஞ்ச உடனே எடுத்துத் தருகிறேன்!”

”அட! துவைக்கப்போடும்போது பாதியை இன்றைக்குத் துவைத்துவிட்டு பின்னொருநாள் மிச்சத்தைத் துவைக்கலாம் இல்ல! என்றேன்” கோபத்தை அடக்கிக் கொண்டு.

”ஆமா! வேலைக்காரி தலைகாணி உறை துவைக்கிறதே பெரிய விசயம், இதுல பாதி மிச்சம் வச்சா மீதி என்னைக்கித் துவைப்பாளோ? உங்களுக்கு என்ன தெரியும் என் கஷ்டம்! படுத்துக்கிட்டே ஒன்னொன்னாக் கேப்பீங்க, நான் கொண்டாந்து தரணும்!! நீங்க ஆடுற ஆட்டத்துக்கு நான் ஆடுவேன்! வேலைக்காரி ஆடுவாளா?” --- பேச்சின் வேகம் அதிகரிப்பது கண்டு உசாராகி அமைதியானேன்!

இரண்டு நாள் கழித்து காலை:
சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டு ஹாலுக்கு வந்தேன். ஷூவை எடுத்து பிரஷால் தூசி தட்டினேன். மகனும் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

”அவனுக்கு ஸ்கூல் பஸ் வந்து விடும், உங்களுக்கு என்ன அவசரம்? அவன் ஷூவுக்கு கொஞ்சம் பாலீஷ் போடுங்க!! அவன் கருப்பு ஷூவைப் பாருங்க, கழுதைக் கலரில் இருக்கு! ஏண்டா? ஸ்கூலுக்குப் போறியா? இல்லை மாடு கீடு மேய்ச்சிட்டு வற்றியாடா? ” சுனாமி வேகத்தில் ஹாலுக்குள் பிரவேசித்தாள் என் மனைவி!

சரி! வாயை மூடிக்கொண்டு அவன் ஷுவுக்குப் பாலீஷ் போட்டேன்“அம்மா சாக்ஸ் எங்கேம்மா? என்றான் என் மகன்.

”வேலைக்கார அம்மாதான் நேத்து துவைக்கக் கொண்டு போனாங்க, நான் பார்க்கல. நீ தேடிப்பார் , எல்லாத்தையும் நான்தான் எடுத்துத் தரணுமா? துவைத்த துணியில் பார் என்றவுடன் அறைக்குள் ஓடி சாக்ஸுடன் வந்தான்.

இந்தாப்பா உன் சாக்ஸ் ( என்னிடம் நாலைந்து சாக்ஸுகள் இருந்தன!!) என்று ஒற்றை சாக்ஸாக நான்கு ஒற்றை சாக்ஸுக்களைத் தந்தான்.
ஏதாவது ஒரு கலரில் ஜோடியாக மாட்டுமா என்று பார்த்தேன். ஊகூம்! ஒன்றும் தேறவில்லை!

”என்ன இது எல்லாம் ஒத்தை சாக்ஸா இருக்கு” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன்.
”அட! என்ன இது! ஆமா!! பாதி சாக்ஸைத் துவைக்கச் சொன்னேன், வெலைக்காரி இப்படித் துவைத்து விட்டாளா?”

”நீங்கதானே பாதியை முதலில் துவைக்கச்சொல்லுன்னு சொன்னீங்க, அவ வந்தவுடன் நீங்களே கேளுங்க” சொல்லி விட்டு என் மனைவி கடகடவென்று தாங்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
அப்பா உன் புளூ கலர் சாக்ஸ் என்னுதோட மேட்சா இருக்கு குடு நான் போட்டுக்கிட்டுப் போறேன் என்று என்னுடைய ஒற்றை நீல சாக்ஸையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என் மகன்!!!

Saturday 6 February 2010

கொஞ்சம் தேநீர்-அவர்கள்!

 

சிறிது நேரம் முன்புதான்

அவர்கள்

இதைக் கடந்திருக்க வேண்டும்!

 

காய்ந்த சிறகுகள்

பாதம் பட்டு நொறுங்குதல்

பற்றி

அவர்கள்

கவலைகொள்ளவில்லை!

 

உறங்கும்

ஆன்மாக்களின்

கல்லறைகளின் மீதே

அவர்கள்

பயணம் அமைந்தது!

 

இங்கிருந்த வேர்களை

வெட்டி அவர்களின்

படகுகளைச்

செய்துகொண்டனர்!

 

அவர்கள் கடந்த

கரையோரங்க்ளில்

புதையுண்டு கிடந்தன

கடந்த காலத்தின்

நிழல்கள்!

 

கழற்றி எறியப்பட்ட

ஆடைகளில்

இன்னும் மீதமிருந்தது

குருதியின் வாசனை!

 

புனைவுகளின்

மறைவுகளில்

அவர்களின்

புதிய முகங்கள்

செதுக்கப்பட்டன!

 

அவர்கள் அங்குதான்

இருக்கிறார்கள்!

Friday 5 February 2010

மதுரை பதிவர் சந்திப்பு-முழுப்படங்கள்,கேள்வி பதில்கள்!!

 

 
image  
 
image  
image image  
image image  
 

மதுரை பதிவர் சந்திப்பு முடிந்து பதிவுகளும் வெளிவந்து விட்டன. குழந்தைகள் பற்றி மட்டுமல்லாது பொதுவான கேள்விகளும் மரு.ஷாலினியிடம் கேட்கப்பட்டன. அவற்றில் குழந்தைகள் பற்றிக்கேட்டதில் எனக்கு ஞாபகத்தில் உள்ள சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1.”குட் டச் பேட் டச்”- சாராம்சம் என்ன?

பதில்:

           அ.அம்மாவும் குழந்தையும் மட்டும் தொட அனுமதிக்கும் உடல் பகுதிகள்.

            ஆ.பிறர் தொட அனுமதிக்கக் கூடாத உடல் பகுதிகள்.

மேலே சொன்ன இரண்டையும் சொல்லித்தருவதும் நடைமுறைப் படுத்துவதுமே!

2.எந்த வயதில் சொல்லித் தர வேண்டும்?

பதில்: மூன்று வயதிலிருந்து.

3.மறைவுப் பகுதிகளின் பெயர்களை ஏன் சொல்லித்தரவேண்டும்?

ஏனெனில் பிறர் எந்தப் பகுதியைத் தொட்டனர் என்பதை அம்மாவிடம் பெயருடன் சொல்ல வேண்டும் என்பதற்காக.

4.ஆண்,பெண் உடலுறுப்புகளை என்ன பெயரில் சொல்லிக் கொடுக்கிறார்கள் – பொதுவாக?

ஆண் உறுப்பை பெனிஸ் என்றே சொல்லிக் கொடுக்கலாம். பெண் உறுப்பை ’க்ராட்ச்’-CROTCH என்ற பொதுவான பெயரிலேயே சொல்லிக் கொடுக்கலாம்.

5.அதைப் பிறர் தொட்டால் குழந்தை என்ன செய்ய வேண்டும்?

இதைத் தொடாதீர்கள் என்று மறுக்கலாம். அந்த இடத்திலிருந்து வந்து விடலாம். வந்து அம்மாவிடம் சொல்லலாம்.

6.இப்படி ’பேட் டச்’ யாரெல்லாம் செய்கிறார்கள்?

பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களே!!

7.குழந்தை இத்தகைய நிலையில் இருப்பதை எப்படி அறிவது?

குழந்தை மூடியாக கலகலப்பில்லாமல் இருக்கும். அந்த வீட்டுக்குப் போகமாட்டேன் என்றோ குறிப்பிட நபர்களிடம் போகப் பிரியம் இல்லாதிருத்தல் ஆகியவை போன்றவற்றிலிருந்து அறியலாம்.

8.இதை எப்படித்தடுப்பது?

குழந்தைகளிடம் அம்மா நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தையின் எல்லா சந்தேகத்துக்கும் திட்டாமல் பதிலளிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அம்மாவிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.

தொல்லை விட்டால் சரி என்று குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ளட்டும் என்று கவனிக்காமல் விட்டுவிடுவது தவறு.

9.பெண் வயதுக்கு வருவது தெரியும். ஆண் வயதுக்கு வருவது என்றால் என்ன?

முதலில் விந்து வெளிப்படுவதே அதன் அறிகுறி.

அந்தப் பருவத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அம்மா பெண் குழந்தைக்கும், மகனுக்கு பெற்றோர் இருவரும்கூட சொல்லித்தர வேண்டும்.

மேல் சொன்னவற்றை நாம் கடைப்பிடித்தாலே ஓரளவு குழந்தைகளிடம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது. அவற்றையும் பின்னர் பார்ப்போம்.

தமிழ்த்துளி,

தேவா.

பி.கு: மேற்கண்ட படங்களை தந்துதவிய(சுட்ட?) பதிவர் தருமி,காவேரிகணேஷ்,கார்த்தி,வெற்றி ஆகியோருக்கு நன்றி..

Wednesday 3 February 2010

எந்த நிறம் அழகு?

எந்த நிறம் அழகு?

     
     

பொதுவாக நம் நாட்டில் பெண்ணோ ஆணோ சிகப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சிகப்பாக இல்லையே என்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.

முதல் பெண் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக தற்போது விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் பின் பல்கிப் பெருகி அனைவரும் வெளியேறி வாழ்நிலைகளின் தகவமைப்புக்கு ஏற்ப தோல் நிறங்கள் மாறியதுதான்  உண்மை.

அப்படி இருக்கும்போது நாம் ஏன் சிகப்பாக இருப்பவர்களை நாம் பிரமிப்புடன் பார்க்கிறோம்? என்பதற்கு மரு.ஷாலினி ஒரு விளக்கம் கூறினார்.

அதாவது இந்தியாவிலும் கடவுள்கள் சிவன் முதல் கிருஷ்ணன் வரை கருப்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வரலாற்றில் குறிப்பிடப்படும் அழகி ராணி கிளியோபாட்ராவே கருப்புதான்.

கருப்பாக இருப்பதை அப்போது யாரும் குறையாக நினைக்கவில்லை.

அப்படியென்றால் ஏன் சிகப்பாக இருப்பது அழகாகக் கருதப்படுகிறது?

நம்மவரை நம்மவரே ஆண்டபோது ஆண்டவர்கள், அரசர்குலமே கருப்பாக இருந்ததால் கருப்பு மதிப்பாக இருந்தது.

அதன் பின் பிரிட்டிஷ், ஐரொப்பிய காலனிகளாக உலகம் மாறிய பிறகு நம்மையும் உலகின் முக்கால் பாகத்தையும் வெள்ளைத் தோல் மனிதர்கள் ஆள ஆரம்பித்தனர். அதன் பின்னரே சிகப்பு மோகம் ஏற்பட்டது. தம்மை ஆள்பவர்கள், பலம் போருந்தியவர்கள் எந்த நிறமே அதுவே விரும்பப்படும், மதிக்கப்படும் நிறமாக மாறும், மாறியது.

தற்போது பலம் பொருந்திய அமெரிக்காவை கருப்பின ஒபாமா ஆள்வதால் அவர் மனைவி அணியும் உடைகள் தற்போது பிரபலமாகின்றன. பார்பி பொம்மையும் கருப்பு அழகியாக தற்போது உருவெடுத்துள்ளது.

இவையெல்லாம் இருக்க இந்த வருட அமெரிக்க அழகியாக ’காரெஸ்ஸா கமெரான்’ என்ற கருப்பின அழகி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதுவரை எட்டு ஆப்பிரிக்க அமெரிக்க அழகிகள் ‘அமெரிக்க அழகி’ களாக கிரீடம் சூட்டப்பட்டுள்ளனர்.

இனிவரும் மனித குலம் ஒன்றிணைந்து கருப்பு வெள்ளை இல்லாத ஒரு பழுப்பு நிறத்தில்தான் இருக்கப்போகிறதாம்.

என்ன சரியா? கருப்பு சிகப்பு எல்லாம் ஒன்றுதான்!!

Tuesday 2 February 2010

டாக்டர் ஷாலினி!!

டாக்டர் ஷாலினி,

மதுரையில் 31.1.2010 அன்று ”குட் டச் பேட் டச்” சொற்பொழிவும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நோக்கம் ”குட்டச் பேட்டச்” பற்றி பெற்றோர்கள் அறியவேண்டும் என்பதுதான். அந்த விதத்தில் அங்கு குழுமியிருந்தோர் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

மூன்று மணிநேரம் ஒரு கருத்துரை ஆற்றுவது என்பது மிகவும் கடினமான விசயம். அதனை மிகவும் தெளிவுடன் செய்தார் ஷாலினி. ஆரம்பத்திலிருந்தே கேள்விகளைக்கேட்டு குழுமியிருந்தோரை சிந்திக்கவும், பதில் கூறவும் வைத்த வண்ணம் அவர் உரையை நடத்திச்செல்லும் பாங்கு மிகவும் அற்புதமாக இருந்தது.

கலந்துகொண்டோர் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய பதில்கள் அவரிடம் தயார் நிலையில் இருந்தன. அவை யாரையும் புண்படுத்தாத வண்ணம் மிகவும் தெளிவாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.

கலந்து கொண்டோரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்போதுதான் சமுதாயத்தில் இதுதொடர்பான பிரச்சினைகள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

அவரால் மூன்று மணி நேரத்துக்கு மேலும் (நின்று கொண்டே!! பேசமுடியும் ஆயினும் அங்கு கலந்துகொண்ட சுமார் 150 பேரிடமும் இன்னும் தெளிவு பெற வேண்டிய கேள்விகள் மிச்சமிருந்தன.

மனச்சிக்கல்களும்,பாலியல் அறியாமைகளும் நிரம்பிக்கிடக்கும் இந்த சமுதாயத்துக்கு இதுபோல் பல கருத்தரங்குகள் தேவை!!

”நீங்கள் பயப்படவேண்டாம் துணிவோடு இருங்கள்! குழந்தைகளுக்கு இதைப் பற்றி சொல்லிக்கொடுங்கள், அதையும் மீறிய சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் இருக்கிறோம்” என்று அவர் கூறியது சமுதாயத்தின் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையைப் பறைசாற்றியது என்றால் அது மிகையல்ல!!

Lead kindly light என்று ஆங்கிலக்கவிதை ஒன்று உண்டு

Lead, kindly Light, amid th’encircling gloom, lead Thou me on!
The night is dark, and I am far from home; lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.

மருத்துவராக, ஆலோசகராக ஷாலினி பலரின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறார்.

வெல்டன் ஷாலினி!!!

உங்கள் பணி சிறக்கட்டும்!!

தமிழ்த்துளி தேவா.




7:06 AM | Add a comment | Permalink | Blog it
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory